"தென்கைலாயம்" எனப்படும் வெள்ளிங்கிரி மலைக்கு சென்ற சனிக்கிழமை (12-3-2011) நண்பனுடன் சென்று வந்தேன். என் அப்பா பயங்கர பில்ட் up கொடுத்து அனுப்பினார். மிக பயங்கர மலை தான்.திருப்பூரில் இருந்து மதிய சாப்பாட்டுக்கு பிறகு கிளம்பினோம். கோவைக்கு இரண்டு மணிக்கு சென்று அங்கிருந்து, பூண்டி செல்லும் பேருந்தில் "Esha யோகா" மையம் சென்றோம்.
ஒன்னரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வெள்ளிங்கிரி மலை, அடிவாரம் வரை நடந்து சென்றோம். மலை அடிவாரத்தில் "வெள்ளிங்கிரி நாதர்" ஆலயம் உள்ளது.
மாலை சுமார் 8:45 மலை ஏற துவங்கினோம். முதலில் வெள்ளிங்கிரி பத்தி சொல்ல வேண்டும். வெள்ளிங்கிரி மலை என்பது ஏழுமலை சேர்ந்தது. 6500 அடி உயரம். அதாவது சுமார் இரண்டு கிலோமீட்டர் மேல்நோக்கி ஏறுவது. மத்த மலைக்கும் இதற்கும் உள்ள வித்யாசம், இதில் ஒழுங்கான படி எல்லாம் கிடையாது. முதல் மூணு மலைகளுக்கு சுமாரான படிகள் இருக்கும். பிறகு ஒற்றை அடி பாதை தான். இந்த மலை தூய வன பகுதியில் உள்ளது. வனம் நிஜ வனமாக உள்ளது. யானையின் துதிக்கையை பிடித்து துவம்சம் செய்து, சிங்கத்தை பிடரியை சீவிவிட்டு, புலியின் பற்களை புடுங்கி.. என்று நினைத்து கொண்டு இருந்த எனக்கு, ஒரு யானையின் பிழிரலை கேட்டு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. (இதுவரை ஜூவில் கூட யானை சத்தம் போட்டு கேட்டது இல்லை). மலை ஏறி கீழே இறங்கும் வரை ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.
இதுவரை செய்யாத உடல் பயிற்சிகள் மலை ஏறும் போதுதான் நினைவுக்கு வந்தது. நான் போட்டிருந்த துணிகளே பாரமாகி வெறும் டிரௌசரோடு மேலே போய் சேர்ந்தேன். நமக்கு தேவையானதை நாம் தான் கொண்டு செல்ல வேண்டும், தண்ணீர் உட்பட. மேலே ஒன்றும் கிடைக்காது.
முதல் மலை முடிவிலும், இரண்டாவது மலை முடிவிலும் ஒரு சுனை உள்ளது. முதல் மூன்று மலை ஏறும் போது கடும் வியர்வை வெளியேறும். Dehydration- ஐ தடுக்க தண்ணீர் குடிக்க வேண்டும். முதல் இரண்டு சுனைகளில் தண்ணீர் பிடித்துக்கொண்டால் உண்டு, இல்லையேல் ஆறாவது மலை முடிவில் தான் அடுத்த சுனை.
நான்காவது மலையிலிருந்து பாதை மிக சுமாராக தான் இருக்கும். நான்காவது, ஐந்தாவது மலை காற்று வீசும். வெளியேறும் வியர்வை, எதிர்படும் காற்றில் காய்ந்து விடும். நான்காவது மலையை திருநீர் மலை என்பர். அங்கு உள்ள மண் எல்லாம் திருநீறு போல இருக்குமாம்.
ஆறாவது மலை வந்து சேரும் போது சரியாக மணி இரவு ஒன்று. குளிர் ஆரம்பித்து விட்டது. அத்துடன் மழையும் சேர்ந்துகொண்டது. ஆறாவது மலையில் ஒரு சுனை உள்ளது. ஒரு குளியலை போட்டு கிளம்பினோம். சுனை நீர் படு குளிராக இருந்தது. ஆயிரம் ஊசிகள் ஒரே நேரத்தில் என் முதுகில் குத்தியது போல் உணர்ந்தேன்.
ஆறாவது மலை முடிவில் ஒரு தேனீர் கடை உள்ளது. எல்லாம் இரு மடங்கு கட்டணம். ஒன்னரை மணி அளவில் அந்த கடைக்கு போய் சேர்ந்தோம். மழையும் கடுமையாக இருந்தது. ஒரு மணி நேரம் கடுமையான மலை. ஏழாவது மலை மிக கடுமையாக இருக்கும் என்றும், மழை பெய்த ஈரம் இருந்தால் வழுக்கும் என்று கூறினார்கள். பாதி ஏறியவர்கள் கூட பாறை வழுக்குகிறது என்று திரும்பி வந்தார்கள். இரண்டரை மணி நேரம் ஒரு கூடாரத்தில் இருந்தோம்.
நாங்கள் மீண்டும் காலை நாலு மணி அளவில் ஏழாவது மலையை ஏற ஆரம்பித்தோம். ஏழாவது மலை மிக மிக கடினம். கிட்ட தட்ட கைலாசத்தை போல உள்ளது. பாதையும் செங்குத்தாக உள்ளது. மிக பெரிய பிரச்சனை, குளிர் தான். நான் மலைத்து போய் விட்டேன். இந்த மார்ச் மாதத்தில் இப்படி ஒரு குளிரா. ஒரு முறை இங்கு தான் ஒருவர் குளிரில் உறைந்து விட்டாராம். அப்பா சொன்னார். பனிப்புயல் கூட அடிக்கடி வருமாம்.
உச்சி மலையை 5:30 கு சேர்ந்தோம். காலை சூரிய உதயத்தை பார்த்து விட்டு 6:45 கு கிளம்பினோம். வெயில் ஏறுவதற்கு முன் இறங்க வேண்டும். இறங்குவது ஏறுவதை விட சிரமமாக இருந்தது. மிக மிக ஜாக்கிரதையாக இறங்க வேண்டும். பாதை பெரும்பாலும் பள்ளத்தாக்கை ஒட்டியே செல்லும். விழுந்தால் நேராக சிறுவாணி அணை தான். கீழே இறங்கும் போது மணி மதியம் ஒன்று.
கீழே இறங்கி இரண்டு நாள்கள் ஆகியும் கால்வலி போகவில்லை.